என்னுடடைய 11-வது வயதிலிருந்து(1972ஆம் ஆண்டுமுதல்) நான் சென்னைக்கு மிக அருகே அதாவது சென்னை சென்ட்ரலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் சென்னை பாரிமுனையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள கொரட்டூரில் வசித்து வருகிறேன். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக 1972 ஆம் ஆண்டில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.அகலமான சாலைகள் அமைக்கப்பட்டன. நிழல்தரும் மரங்கள் சாலையின் இருமருங்கிலும் வளர்க்கப்பட்டன. கொரட்டூர் அண்ணாநகருக்கு மிக அருகில் 5 கிலோமீட்டரில் அமைந்திருந்ததால் இன்னொரு அண்ணாநகராக கொரட்டூர் மிக விரைவில் உருவாகும் என்ற எண்ணம் கொரட்டூர் வாசிகள் மனதில் உருவானது. ஆனால் 1972 வீட்டுவசதி வாரியம் உருவாக்கப்பட்டபோது என்ன குறைந்தபட்ச வசதிகள் உருவாக்கப்பட்டதோ அதைத்தவிர எந்தவித முன்னேற்றமுமில்லாமல் போனது. மேற்கூரை, கழிவறைகள், ஓய்வறைகள் மற்றும் எந்த விதமான வசதிகளும் இல்லாத ஒரிடத்தை பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டாக உபயோகித்து வருகின்றன. 7-B பஸ்ஸைத் தவிர மற்ற பஸ் வசதிகள் இல்லை. எப்பொழுதாவது 47-D கட் சர்வீஸ் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்ஸ்டாண்ட் நகராட்சிக்குச் சொந்தமானதா? அல்லது தனியாருக்கு சொந்தமானதா? என்றே தெரியாதளவுக்கு தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. கொரட்டூருக்கு அழகு சேர்க்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலுள்ள அகலமான சாலைகளின் நடுவில் சிறிதளவுக்கே தார் போடப்பட்டுள்ளதால் சாலையின் பக்கவாட்டுப் பகுதிகலெல்லாம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
கொரட்டூரை அம்பத்தூர் தொழிற்பேட்டையுடன் இணைக்கும் முக்கிய சாலைகளான கிழக்கு நிழல் சாலை மற்றும் சென்ட்ரல் நிழல் சாலை கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. தனியார் கல்லூரி பேருந்துகள், தனியார் நிறுவன பேருந்துகள், சரக்கு லாரிகள் மற்றும் சரக்கு வேன்களை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள். கொரட்டூர் காவல்நிலையமும் தன்பங்குக்கு இந்த சாலையை ஆக்கிரமித்துள்ளது. விபத்தில் சிக்கி உருக்குலந்த வாகனங்களின் மிச்சங்களை காவல் நிலையத்தின் எதிரே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் இந்த இடத்தை கடப்பதற்க்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.தனியார் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி களையவேண்டிய அம்பத்தூர் நகராட்சியோ நகராட்சி தண்ணீர் லாரிகளை சாலையின் இருமருங்கிலும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டது.
0 comments:
Post a Comment